கவிதைகள்

சீனத்துச் சிங்காரிக்கு

சிட்டுக் குருவிகளாய் சிறகடித்தவர்கள்
சிறகிழந்து போனார்கள்
தட்டிக் கேட்க ஆளில்லையென
தரணியிலே உலாவுகின்றாய்
தொட்டாலும் பேசினாலும் ஒட்டுகின்றாய்
விடுவிடென எங்கும் விரைகின்றாய்
பட்டெனவே பரவுகிறாய் பாரினிலே
சீனாவின் உற்பத்திப் பொருள்போலே

கொரோனா எனும் நாமத்துடன்
குரோதம் தீர்த்து நிற்கின்றாய்
உன்னுடன் ஒருபுறம் போர்
பட்டினியுடன் மறுபுறம் போர்
கனவுக்கன்னியாய் உலாவருகின்றாய்
உறக்கம் தொலைத்தோம் உன்வரவால்
கண்களில் ஏக்கம் கைகளில் நடுக்கம்
தினசரி செய்திகள் பேரிடியாகும்.

இன மத வேறுபாடின்றி
மொழி வழி பேதமற்று
பற்றிப் பிடித்திட்டாய்
பாடம் புகட்டிவிட்டாய்
சிற்றரவு பேரரசு பேதமின்றி
பைத்தியம் ஆக்கிவைத்தாய்
இன்றைக்கும் நிம்மதியில்லை
இந்நிலைதான் நீடிக்குமோ?

சீனத்துச் சிங்காரியே உந்தன்
கோபம் தணிந்து செல்வாயம்மா
உலகெங்கும் மனித உயிர்கள்
நிறைவாய் வாழ்ந்திட வேண்டுமமம்மா
மனமுருகி கரங்கூப்பி வேண்டுகிறோம்
மறைந்தே நீயும் சென்றிடம்மா
கனவல்ல நனவுதான் என நினைத்தே
மக்கள் மகிழ்ந்திட வேண்டுமம்மா…


-திருமதி.கிருஷ்ணவேணி சிங்கராஜன் (ஆசிரியர்)