ஆங்கில பாட விழிப்புணர்வுக் கருத்தரங்கு

வயாவிளான் மத்திய கல்லூரி, தரணிவாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் நல்லூர் றோட்டறி கழகம் என்பன இணைந்து யா/வயாவிளான் மத்திய கல்லூரி திறன் வகுப்பறையில் நடாத்திய இணைய வழி ஆங்கிலபாட விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (05-01-2021) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் திரு.வே.த.ஜயந்தன் அவர்கள் இந்நிகழ்வை நெறிப்படுத்தி எமது பாடசாலை மாணவர்களும் கலந்து கொள்ள ஆவன செய்திருந்தார்.

இந்நிகழ்வில் வளவாளராக செல்வி. ரதனி பாலசுந்தரம் (SLEAS – III) உதவிக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்வித் திணைக்களம், வடக்குமாகாணம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு செயலமர்வவை நிகழ்த்தினார்கள்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆங்கிலபாட ஆசிரிய ஆலோசகர் செல்வி. யெகநந்தினி முத்துக்குமாரு அவர்கள் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து வழிப்படுத்தினார்.

துடுப்பாட்ட உபகரணங்கள் கையளிப்பு

கல்லூரியின் விளையாட்டுத்துறையின் வளர்சசிக்கு உதவும் பொருட்டு 1996 O/L வகுப்பு மாணவர்களால் ரூபா 275000 பெறுமதியான துடுப்பாட்ட உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

மற்றுமொரு புதிய திறன் வகுப்பறை

எமது கல்வி அபிவிருத்தி திட்டத்தை மென்மேலும் மேம்படுத்துமுகமாக மற்றுமொரு புதிய ரக திறன் வகுப்பு (smart classroom) உபகரணங்கள் 1984 O/L & 1987 A/L வகுப்பு பழைய மாணவர்களால், 05/09/2020 அன்று பாடசாலையில் கையளிக்கப்பட்டது.

பவள விழாவை முன்னிட்டு கிரிக்கெட் ஆடுகளம்

எமது கல்லூரியின் பவளவிழாவின் அடுத்த நகர்வாக கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்திற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு இன்று (12-09-2020) பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. ஆலயவழிபாடுகளை தொடர்ந்து ஆலயத்தில் இருந்து அடிக்கல் எடுத்து வரப்பட்டு சம்பிரதாயமாக நிகழ்வு இடம்பெற்றது.

பவளவிழாவை முன்னிட்டு இயற்கை விவசாயத் திட்டம்

பழைய மாணவர் சங்கத்தினூடாக ‘மரங்கள் வளர்ப்போம்’ அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் பாடசாலை விவசாயக் காணியை துப்பரவு செய்வதற்கும் பயன்தரு மரங்களை நடுவதற்கும் ஆரம்ப வேலைக்கான முற்பணமாக ருபா முப்பதாயிரம் வழங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

எமது கல்லூரியில் எண்பதுகளிலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் பயன்தரு மரங்கள், வெங்காயம், வாழை என பல்வேறு விவசாய நடவடிக்கைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பால்மாடுகளும் வளர்க்கப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு பால் மிக பயன்பட்டதை அன்றைய கால மாணவர்கள் நினைவுகூருவர்.
இடப்பெயர்வின் பின்னான காலங்களிலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் வளப்பற்றாக்குறையால் இம்முயற்சி தாமதமானது. இப்போது பாடசாலைச் சமூகத்தினரால் மேற்படி செயல்திட்டம் பவளவிழா நிகழ்வோடு முனைப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திறன் வகுப்பறை திறப்பு விழா

வயாவிளான் மத்திய கல்லூரி வரும் ஆண்டில் பவளவிழா காண இருக்கும் நிலையில் பல்வேறு நலத் திட்டங்கள் கல்லூரி சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஓர் அம்சமாக மூன்று திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர் செயற்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்வு 14-08-2020 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ திரு. ப.சுந்தரசிவம் அவர்கள்(வலயக் கல்விப் பணிப்பாளர், வலிகாம வலயம் ) கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக தெல்லிப்பளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கௌரவ நொபேட் உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமைதாங்கினார். அவர் உரையாற்றுகையில், நவீன திறன் வகுப்பறைகளை வயாவிளான் மத்திய கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்த பழைய மாணவர்களைப் பாராட்டியதுடன் காலத்திற்கேற்ப சிறந்த தொழிநுட்ப வசதிகளுடன் இந்த வகுப்பறை விளங்குவதாகவும் அது மாணவர்களுக்கு வினைத்திறனுடன் கற்பிக்க ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்ளையும் தெரிவித்தார்.

பிரதம விருந்தினர் அவர்கள். பழைய மாணவர்களை பாராட்டியதுடன், ஒரு கல்லூரிக்கு அதிபர் அவர்களே கடவுள் போன்றவர், எனவே அவரது வழிகாட்டலில் பல்வேறு செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைத்து மாணவர் கல்விச் செயற்பாடுகளை நல்ல முறையில் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இயற்கையோடு ஊடாடி சமூக மயமாக்கல் இல்லாமையால் நடத்தைப் பிறழ்வுக்கு இட்டுச் செல்லப்படுகின்ற இளைஞர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகிறார்கள். பாடசாலைப் பற்று, அகக் காட்சியின் அக உணர்வு, இயற்கையோடு இணைந்த வாழ்வு பற்றிய இரசனைக் கோலங்களற்ற வாழ்வு இளைஞர் சமுதாயத்தை பின்னடைவிற்கு இட்டுச் செல்கின்றது. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தினால் அதி உச்ச பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

கோட்டக் கல்வி அலுவலர் இப்பாடசாலையில் நிறுவப்படும் திறன் வகுப்பறை சிறந்த முறையில் பயனுற தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நிகழ்வில் அடுத்து நளின் நிறுவனத்தினரால் திறன் வகுப்பறைப் பயன்பாடு பற்றி விருந்தினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

யாழ் மாவட்டச் செயலக்த்தால் ஒரு திறன் வகுப்பறையும், கனடா மொன்றியல் வாழ் பழைய மாணவர்களால் ஒரு திறன் வகுப்பறையும், பழைய மாணவர்களாகிய திரு.மு.மகேஸ்வரராஜா, திரு. நா.குணபாலன், திரு.கி.கிருபானந்தன். திரு.சு.கேதீஸ்வரன் ஆகியோரால் ஒரு வகுப்பறையும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.